வேதத்தை புரட்டுவதன் விளைவு?
வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
தீத்து 3:10
அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
தீத்து 3:11
உண்மையான சத்தியத்திற்கு மாறுபட்டக் காரியங்களைக் கற்பிக்கிறவன், அதாவது பொய்யான விஷயங்களைக் கற்பிப்பதன் மூலம், மற்றவர்கள் உண்மையான போதனைகளை நம்புவதை விட்டவிடுவதற்கு காரணமாகிறவன், தனக்குத்தானே ஆக்கினைத்தீர்ப்பை வருவித்துக்கொள்ளுகிறான்.
பொதுவாக வேதத்தை அறிந்திருக்கிறவனே, அதை புரட்டி போதிக்கமுடியும். அப்படியானால் அவன் மறுபடியும் பிறந்த அனுபவமுள்ளவனாக இருந்து, சத்தியத்தை மறுதலிக்கிறவனாக இருக்கக்கூடும். அவன் வேதத்தைப் புரட்டுவதற்கு காரணம் அறியாமை என்பதைவிட, ‘ஆதாயம்’ என்பதே சரியாக இருக்கும்!
இப்படிப்பட்டவன் குணப்படுவதற்கு தமது பிள்ளைகளின் வழியாய் தேவன் இரண்டொருதரம் வாய்ப்பளிக்கிறார்.
ஒருவன் வேதத்தைப் புரட்டினால், அதாவது ஒரு வசனம் எதைப்பற்றிப் பேசவில்லையோ அதை பேசுகிறதாகக் கற்பித்தால், தேவன் அவனை நியாயந்தீர்ப்பார் என்று தேவபிள்ளைகள் எச்சரிக்கவேண்டும். அவன் நிறுத்தவில்லையென்றால், மீண்டும் ஒரு முறை எச்சரிக்கலாம். அதற்கு பின்பும் அவன் வேதப்புரட்டை நிறுத்தவில்லையென்றால், இனி அவனுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில், அவன் தனக்கு நரகாக்கினையை உறுதிப்படுத்திக்கொண்டான்!
தனது பொருளாசையினால் தந்திரமான வார்த்தைகளால் அநேக ஜங்களைத் தனக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவதற்காய், கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணுகிற அவன், தேவன் தனக்கு அளிக்கும் வாய்ப்பை மறுக்கிறதினால், நரகத்துக்குத் தப்புவதற்கு வாய்ப்பே இல்லை. (2 பேதுரு 2:1-3)
தனது சொந்த ஆதாயத்திற்காய் தேவனுடைய வார்த்தைகளுக்கு தனது சொந்த அர்த்தங்களைக் கற்பித்து, தன்னை திருத்திக்கொள்வதற்கு சத்தியத்தை சரியாய் போதிக்கிறவர்கள் மூலம் தேவன் கொடுத்த எச்சரிப்பைக் கண்டுகொள்ளாத அவன், இனி திருந்த வாய்ப்பே இராதபடிக்கு, சத்தியத்தைப் பேசுகிறவர்களை விட்டு தனிமைப்படுத்தப்படுகிறான்.
அவன் இனி சத்தியத்தினிடத்திற்குத் திரும்பி, பரலோகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை!
வேதத்தை முறையாய், சரியாய் கற்றறியாமல் (2 தீமோ.3:14,15), நிதானமாய் பகுத்து போதியாமல் (2 தீமோ.2:15), கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் கலப்பின்றி பேசாமல் (2 கொரி.2:17), நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்கிறவர்கள் (ரோமர் 16:17,18) தங்களை திருத்திக்கொள்வது நல்லது!
மறுபடியும் பிறந்தவன் வேதப்புரட்டிலிருந்து மறுபடியும் சத்தியத்திற்கு திரும்பாவிட்டால், அவனுக்கு மறுமை வாழ்வு மறுக்கப்படுவது நிச்சயம்!
(தொடரும்....)
- க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்புத்தூர்.
8946050920