லீஸ்திராவிலே தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்திருந்தவனை பவுல் நடக்கசெய்ததை ஜனங்கள் கண்டு, *தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள்* என்று சத்தமிட்டு சொல்லி, *பர்னபாவை யூப்பித்தர் என்றும்,* பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் *அவனை மெர்க்கூரி என்றும்* சொன்னதோடுமட்டுமல்லாமல், பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டு வந்து, ஜனங்களோடேகூட *அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தபோது,*
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்;
*”மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே,* நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, *வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று* உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்” என்று தங்களைத் தாழ்த்தி, அவர்களிடம் தேவனை உயர்த்தியதை இன்றைய அற்புதப் பிரசங்கிகள் மனதில் பதித்துக்கொள்வது அவசியம்! (அப்.14:8-15)

“நாங்கள் பல ஆயிரங்கள் செலவுசெய்து வரங்களைப் பெறுவதற்கான பயிற்சி எடுத்தோம், எங்களுக்கு வரம் கிடைக்க ஜெபித்த வரம்பெற்ற விசேஷித்த ஊழியருக்கு நாங்கள் விசேஷித்தக் காணிக்கை கொடுத்தோம், ஆகையால் நாங்களும் வரங்கள் மூலமாக பணம் சம்பாதிக்கவே செய்வோம்” என்கிறவர்கள், அதிக ஆக்கினையடையவேண்டியிருக்கும்!

தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நினைத்த மனந்திரும்பின மந்திரவாதி சீமோன், பணத்திற்காக வரங்களை விற்பனை செய்யும் நோக்கமுள்ளவனாக இருந்திருக்கக்கூடும்!

இதனாலேயே “உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது” என்று பேதுரு அவனை சபித்திருக்கக்கூடும்! (அப்.8:21-23)

தங்கள் சுய லாபத்திற்காகவும் சுய மகிமைக்காகவும்
தமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைக்கிறவர்களையும், பிசாசுகளைத் துரத்துகிறவர்களையும், அநேக அற்புதங்களைச் செய்கிறவர்களையும் நோக்கி: “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்று அந்நாளில் ஆண்டவர் சொல்லநேரிடும்! (மத்.7:22,23)

“அதிலுள்ள *தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்,* கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள், *திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்,* அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்” என்று யூதாவின் தீர்க்கதரிசிகளைக்குறித்து தேவன் மிகவும் வேதனைப்பட்டார். (எசேக்.22:25)

தாங்கள் சொன்ன தீர்க்கதரிசனங்களுக்காக அவர்கள் ஜனங்களிடம் திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொண்டார்கள்! ஜனங்களும் அவர்களின் போலி தீர்க்கதரிசனத்திற்காக திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் கொடுக்க முன்வந்தார்கள்!!

பேதுரு மற்றும் பவுல் செய்த அற்புதத்தை இன்று ஒரு ஊழியக்காரர் செய்துவிட்டால், அவர் தன்னை எப்படியெல்லாம் விளம்பரப்படுத்திக்கொள்வார் என்பதையும், அதைவைத்து எத்தனைக் கோடிகள் சம்பாதிப்பார் என்பதையும், சுகம் பெற்றுக்கொண்டவர்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார் என்பதையும் சற்று யோசித்துப்பாருங்கள்!

“வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், *இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்”* என்று ஆண்டவர் தமது சீஷர்களுக்கு கட்டளையிடுகிறார். (மத்.10:8)

ஆவிக்குரிய வரங்கள் இலவசமாய் பெறப்படவும், இலவசமாய் பயன்படுத்தப்படவும் வேண்டும் என்பதே வேதசட்டம்!

எல்லாருக்கும் பயமுண்டாகத்தக்கதாய் அநேக அற்புத அடையாளங்களை செய்த அப்போஸ்தலரிடம் (அப்.2:43) பிச்சைப்போடுவதற்கு வெள்ளியும் பொன்னும் (பணம்) இல்லை! (அப்.3:6)

தங்கள் வரங்களை அவர்கள் விற்பனை செய்திருந்தால் இஸ்ரவேலின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் அவர்கள் இடம் பிடித்திருப்பார்கள்!

காசு இல்லாத அவர்களிடம் இயேசு இருந்தார்! (அப்.3:6) இன்று காசு அதிகம் உள்ள அப்போஸ்தலரிடம் இயேசு தென்படுகிறாரா என்று தேடிப்பாருங்கள்!!

ஆவியின் வரங்கள் ஒவ்வொன்றை குறித்தும் ஆராய்வதற்கு முன்பாக, வரங்களை கொடுக்கும் ஆவியானவரைக்குறித்து நாம் ஆராய்ச்சி செய்வது அவசியம்.

*க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
        கோயம்புத்தூர்.
            8946050920

                (தொடரும்…..)

Please enable JavaScript in your browser to complete this form.
Name

By admin

Dear in Christ,

Please fill the form and look into the Website…

Please enable JavaScript in your browser to complete this form.
Name